புதன், 15 ஆகஸ்ட், 2012


Matham Manithanai Murgam aakum .jathi manithanai sakadai aakum


Religion is regarded by the Common People as True,
by Wise as False and by Rulers as Useful’
                                                      – Seneca
பிறப்பால் நான் ஒரு கிருஸ்துவன்’ என்றார் எதிரிலிருந்த நண்பர்.
அவரது அறியாமையை நினைத்துப் பரிதாபமாக இருந்தது எனக்கு.
குழந்தை குழந்தையாகத்தான் பிறக்கிறது.
இங்கு எவரும் பிறக்கும்போதே ‘இந்து’வாகவும்,
‘இசுலாமிய’ராகவும்,
‘கிருஸ்தவ’ராகவும் பிறப்பதில்லை.
நான் பிறக்கும்போது என்னுடைய அப்பா
‘காந்தி காமராஜ் தேசியக் காங்கிரசில்’ (குமரி அனந்தனின் பழைய கட்சி) இருந்தார் என்பதற்காக நான் பிறக்கும்போதே கா.கா.தே.கா.வாகத்தான் பிறந்தேன் என்பது
எவ்வளவுக்கெவ்வளவு அபத்தமோ
அவ்வளவுக்கவ்வளவு அபத்தம்
நான் பிறப்பால் இந்துவென்பதும், முஸ்லிம் என்பதும்
இன்னபிற இத்யாதிகளென்பதும்.
தமிழக அரசின் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டப்படி
உண்மையில் ‘கம்பி எண்ண’ வைக்கப்பட வேண்டியவர்கள்
உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள்தான்.
எந்தவித தத்துவப் பின்னணிகளும்
அரசியல் சித்தாந்தங்களும்
மத எண்ணங்களும இன்றிதான்
ஒரு உயிர் உதிக்கிறது இந்த மண்ணின் மடியில்.
உண்மையான கட்டாய மதத் திணிப்பு
மழலைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது.
அதுவும் பெற்றோர்களால்.
மதம் தானாய் மாறுவது –
மாற்றப்படுவது –
மாறாமலே இருப்பது என்கின்ற விஷயங்களையும் தாண்டி
நாம் கவனிக்க வேண்டியவை சிலதும் இருக்கின்றன.
அதுதான்: மதத்தைத் தேர்வு செய்யும் உரிமை (Right to Choose)
எப்படி இந்த நாட்டின் ‘இறையாண்மையையே’ காப்பாற்றுவதற்கு
ஒருவருக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ…
அப்படி மதத்தைத் தேர்வு செய்வதற்கும் வயது வரம்பு தேவை
என்பது எனது கருத்து.
இந்த நாட்டில் இல்லாத ‘ஜனநாயகத்தையே’ தூக்கி நிறுத்துவதற்கு
எப்படி 18 வயது நிச்சயிக்கப்பட்டிருக்கிறதோ
அதைப் போன்றே… இல்லாத மதங்களை தீர்மானிப்பதற்கும்
வயது தேவை என்பதுதான் சரியானது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
அரசியல் கட்சிகளது தேர்தல் அறிக்கைகளையோ
எந்தக் கர்மத்தையோ ‘அலசிப்பார்த்து’ ஓட்டுப் போடுவதைப் போல
சகல மதங்களின் யோக்யதைகளையும் உரசிப் பார்த்து தீர்மானிப்பதே உத்தமமான விஷயம்.
இதில் கட்சிகளும் மதங்களும் நம்மை முடிந்தளவிற்கு மடையர்களாக்குகின்றன.
இந்தத் ‘தேர்ந்தெடுக்கும்’ விளையாட்டில் சலிப்புற்று
‘தேர்தல் பாதை திருடர் பாதை’ என்று நிராகரிப்பதைப் போல
‘எம்மதமும் சம்மதமில்லை’ எனத் தீர்மானிக்கும் உரிமையும் இதில் உள்ளடக்கம்.
கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்…
‘மதம் மக்களுக்கு அபின்’ என்ற மார்க்கம்…
‘மதம் மக்களுக்கு விஷம்’ என்ற ஈ.வே.ராமசாமியும்…
‘நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே…’ என்ற வள்ளலாரும்…
இன்று இருந்திருந்தால்…
‘பாகிஸ்தானின் கைக்கூலி’யாகவோ…
‘மதத்துரோகியாகவோ சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்.
அல்லது ‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு’ ஊறு விளைவித்ததாகக் கூறி
தடாவிலோ… பொடாவிலோ உள்ளே தள்ளப்பட்டிருப்பார்கள்.
மொத்தத்தில் எல்லா மதங்களுமே அம்பலப்பட்டு நிற்பது
பெண்கள் விஷயத்தில்தான்.
என்னதான் மதங்கள் சமத்துவம் – சகோதரத்துவம் – அன்பு
என ஓலமிட்டாலும் பெண்களைப் பொறுத்தவரை
இவர்கள் எண்ணம் – செயல் எல்லாம் ஒன்றுதான்.
இவைகள் அனைத்தும் ஒரே குரலில்
ஆணாதிக்கத்தையே பறைசாற்றுகின்றன என்பதுதான் உண்மை.
என்னதான் பைபிளைக் கரைத்துக் குடித்தாலும்
ஒரு பெண் போப்பாக முடியாது.
என்னதான் நான்கு வேதமோ நாற்பத்தேழு மந்திரமோ நுனி நாக்கில் வைத்திருந்தாலும்
ஒரு பெண் மடாதிபதியாகவோ, சங்கராச்சாரியாகவோ முடியாது.
என்னதான் குர்ரானைத் தலைகீழாக ஒப்பித்தாலும்
ஒரு பெண் மெளலவியாகவோ, இமாமாகவோ முடியாது.
ஏனெனில், மனித குல விடுதலைக்கான நெடிய போராட்டத்தில்
இம்மதங்கள் என்றுமே பெண்களுக்கு எதிராகவே அணிவகுத்திருக்கின்றன.
மதங்களைச் சுற்றி என்னத்தான் ‘தத்துவப்’ புணுகு பூசினாலும்
நெற்றி அடியாய் என்னைச் சுற்றிச்சுற்றி வருபவை இரண்டே இரண்டு வரிகள் தான்.
‘மதத்தை மிதி.
மனிதனை மதி’
என்பதே அது.
மதவாதிகள் மனிதனைக் கொன்றுவிட்டு
கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடவுளோ மதக் கலவரங்களில்
தான் கொல்லப்படாமலிருப்பதற்காக
நாத்திகர்களது கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்.
பாவம் கடவுள்.